பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முகமதுமியா சேத்வாலா, கடந்த ஜூன் 2025-ல் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் தனது மனைவி மற்றும் மகளைப் பறிகொடுத்தார். அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 241 பேர் உயிரிழந்தனர்.

தனது மனைவியின் விசா அடிப்படையில் பிரிட்டன் வந்திருந்த சேத்வாலாவுக்கு, மனைவியின் மறைவுக்குப் பிறகு அங்கு தங்குவதற்கான சட்டப்பூர்வ உரிமை பறிபோனது. தற்போது மனிதாபிமான அடிப்படையில் அவர் தாக்கல் செய்த குடியுரிமை விண்ணப்பத்தை பிரிட்டன் உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளதுடன், அவரை ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒரே விபத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து மன உளைச்சலில் இருக்கும் சேத்வாலா, இந்தியா திரும்புவது தமக்குச் சாத்தியமற்ற ஒன்று எனக் கண்ணீருடன் கூறுகிறார்.

இந்தியாவில் தனது குடும்ப நினைவுகள் வாட்டுவதால், அங்கிருந்து மீண்டு வருவது கடினம் என்றும், பிரிட்டனில் தங்கி வாழ்க்கையை மீண்டும் தொடங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சட்ட விதிகளின்படி அவர் வெளியேற வேண்டும் என்பதால், அவரது எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஒருபுறம் குடும்பத்தை இழந்த சோகம், மறுபுறம் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் என அவர் பெரும் இக்கட்டான நிலையில் தவித்து வருகிறார்.