புனேவில் வாலிபர் ஒருவர் தான் போலீஸ் வேலையில் சேர்ந்துவிட்டதாக நாடகமாடிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. நர்ஹே பகுதியைச் சேர்ந்த 26 வயது ரிஷிகேஷ் ஜாதவ், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். போலீஸ் ஆக வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு, ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் அவரால் தேர்வாக முடியவில்லை.
இதற்கிடையில் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ததால், அந்த அழுத்தத்தில் தான் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டதாகத் தனது தாயிடம் பொய் கூறியுள்ளார்.
அந்த மகிழ்ச்சியில் ஊர் முழுவதும் இனிப்பு வழங்கி, “புனே மாநகர போலீஸ் படைக்குத் தேர்வான ரிஷிகேஷிற்கு வாழ்த்துகள்” எனப் பெரிய பிளெக்ஸ் பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளார்.
வாலிபரின் இந்த ‘வெற்றி’ செய்தியைக் கேட்ட நிஜமான நர்ஹே பகுதி போலீசார், தங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை கிடைத்துவிட்டதே என்று வாழ்த்துச் சொல்ல அவர் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சென்று அவரிடம் விசாரித்தபோதுதான், அவர் சீருடை அணிந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தது முதல் பேனர் வைத்தது வரை எல்லாமே அப்பட்டமான பொய் என்பது தெரியவந்தது.
அரசு ஊழியராக இல்லாதபோதும், போலீஸ் எனப் பொய் சொல்லி பொதுமக்களை ஏமாற்றியதற்காக அவர் மீது தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிஜ போலீஸிடமே பாராட்டு வாங்க ஆசைப்பட்டு, அந்த ஆசையே அவரைச் சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
