தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருவள்ளூர் தொகுதி தவெக வேட்பாளர் டாக்டர் அருண்குமார் மீது நடிகை சாந்தினி சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான விவகாரத்தில் ஏற்கனவே அறியப்பட்ட சாந்தினி, தற்போது அருண்குமாரை நோக்கித் தனது கணைகளை வீசியுள்ளார்.

கடந்த 2021-ல் மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாகப் புகார் அளித்தபோது, அதில் சட்டவிரோத கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த “முக்கியக் குற்றவாளி” இந்த அருண்குமார்தான் என சாந்தினி வீடியோ வெளியிட்டுள்ளார்.

“பெண்கள் பாதுகாப்பு எனப் பேசும் தவெக-வில், பெண்களுக்கு ஆபத்தான ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார்கள்; இவருக்கு மக்கள் ஓட்டுப் போட வேண்டாம்” என அவர் உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கனவே பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், இப்போது திருவள்ளூர் வேட்பாளர் மீதான இந்த ‘அபார்ஷன்’ புகார் அக்கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் பிரச்சாரம் முடிந்த கையோடு வெடித்துள்ள இந்தச் சர்ச்சை, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பது மே 2-ல் தெரிந்துவிடும்.