முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான யூசுப் பதானின் மாமனார் காலித் கான் மற்றும் மைத்துனர் உமர்ஷா ஆகியோர் மும்பையில் ஒருவரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் பைகுல்லா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு, யூசுப் கான் என்பவர் ஓட்டிச் சென்ற கார் சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் மோதியபோது, அந்த நீர் அங்கிருந்த ஒரு நபர் மீது தெறித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. பாதிக்கப்பட்ட யூசுப் கான் உடனடியாக மன்னிப்புக் கேட்டபோதிலும், காலித் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மூங்கில் கம்பிகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளால் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் யூசுப் கான் மற்றும் அவரது உறவினர்கள் பலத்த காயமடைந்தனர். குறிப்பாக ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பைகுல்லா போலீஸார் காலித் கான், அவரது மகன் உமர்ஷா மற்றும் மற்றொரு உறவினரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நான்காவது நபரான ஷாபாஸ் பதான் தற்போது தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 2-ம் தேதி வரை நீதித்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எம்பி யூசுப் பதானின் நெருங்கிய உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.