திருப்பதி அருகே 78 வயது மூதாட்டியை கொலை செய்து நகைகளைத் திருடிய தம்பதியினரை, போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். திருப்பதி ரூரல் காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பாப்பம்மா என்ற மூதாட்டி, தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது காதில் இருந்த தங்கக் கம்மல்கள் திருடு போயிருந்தன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசுலு மற்றும் அவரது மனைவி ஷோபா ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் இருவரும் சேர்ந்து பாப்பம்மாவைத் துண்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மதுப்பழக்கம் கொண்ட சீனிவாசுலுவுக்கு இருந்த கடுமையான பண நெருக்கடியே இந்த கொலைக்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். திருடிய நகைகளை அவர்கள் ஒரு அடகுக்கடையில் அடகு வைத்திருந்தனர்.
அந்த நகைகளை மீட்ட போலீசார், திருட்டு நகை என்று தெரிந்தும் அதனைப் பெற்றுக்கொண்ட அடகுக்கடை உரிமையாளர் பூபேந்திர பட்டேலையும் கைது செய்துள்ளனர்.
முதியவர்கள், குறிப்பாகத் தனியாக வசிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும்படி யாராவது நடமாடினால் உடனே 100 அல்லது 112 என்ற எண்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் எஸ்பி சுப்பராயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
