தளபதி விஜய் தனது அரசியல் பயணத்திற்காகத் திரையுலகிற்குத் தற்காலிகமாக முழுக்குப் போடும் முன் நடித்த திரைப்படம் ‘ஜனநாயகன்’. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சென்சார் மற்றும் தேர்தல் விதிகள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், ஒட்டுமொத்தப் படமும் இணையத்தில் கசிந்து திரையுலகை அதிர வைத்துள்ளது.
இது தொடர்பாக மதுரை முத்து வெளியிட்டுள்ள வீடியோவில், தனது நண்பர் ஒருவர் போன் செய்து “படம் பார்த்துவிட்டேன்” எனக் கூறியதைக் கேட்டுத் தான் கொதித்துப் போனதாகத் தெரிவித்துள்ளார். “ஒரு படைப்பாளியின் படைப்பை அவர் முன்னாலேயே திருடுவது, தாயின் கருவில் இருக்கும் சிசுவை அழிப்பதற்கு சமமானது.
50 ஆயிரம் பேரின் உழைப்பை இப்படி திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிக்கிறீர்களே, உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?” என மதுரை முத்து மிகக் காட்டமாகச் சாடியுள்ளார். இதற்கிடையே, சைபர் கிரைம் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு மகுடம் சூட்டும் வகையில் பொங்கலுக்கு வரவேண்டிய படம், இப்படிச் சர்ச்சையில் சிக்கியுள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
