உத்தரப் பிரதேச மாநிலத்தின் பேட்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய டீக்கடை இப்போது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ், அண்மையில் இந்தப் பகுதிக்குச் சென்றபோது ஆரியன் என்ற இளைஞரின் டீக்கடைக்குச் சென்று டீ குடித்தார்.

அந்த இளைஞருடன் சகஜமாகப் பேசிவிட்டு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அகிலேஷ் யாதவின் எளிமையைப் பலரும் பாராட்டி வந்தனர். ஆனால், அகிலேஷ் யாதவ் சென்ற சில நாட்களிலேயே அந்தக் கடைக்கு அரசு அதிகாரிகள் ‘திடீர்’ விசிட் அடித்துள்ளனர்.

டீக்கடையில் அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, சுகாதார விதிகளை மீறியதாகக் கடைக்குச் சீல் வைக்கப்போவதாக அதிகாரிகள் எச்சரித்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ஆரியன், “அகிலேஷ் யாதவ் என் கடைக்கு வந்து டீ குடித்த ஒரே காரணத்திற்காகத் தான் அதிகாரிகள் என்னைப் பழிவாங்குகிறார்கள்.

எனது வாழ்வாதாரத்தைப் பறிக்கிறார்கள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரிகளின் நெருக்கடி தாங்க முடியாமல் தனது கடையையே மூடுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

பாஜக அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி ஆதரவாளர்களை மிரட்டுவதாகவும், சாதாரண ஏழை வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பதாகவும் சமாஜ்வாதி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “யோகி ஆதித்யநாத் ஆட்சியில் டீ குடிப்பது கூட குற்றமா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவதால், இந்தப் பிரச்சனை இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.