அஸ்வகந்தா செடியின் இலைகளை உணவு மற்றும் ஆரோக்கியப் பொருட்களில் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. அஸ்வகந்தா இலைகளில் உள்ள ‘விதாபெரின்-ஏ’ என்ற வேதிப்பொருள் கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஏற்கனவே உள்ள இலைகள் கலந்த பொருட்களை உடனடியாகத் திரும்பப் பெற உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. பொதுவாக அஸ்வகந்தாவின் வேர்கள் மட்டுமே மருத்துவக் குணம் கொண்டவை என்றும், இலைகளை வெளிப்புறப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.

ஆனால், இலைகள் மலிவாகக் கிடைப்பதால் சில நிறுவனங்கள் லாபத்திற்காக அவற்றைச் சேர்த்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் அஸ்வகந்தா பொருட்களை வாங்கும்போது அதன் உறையில் ‘அஸ்வகந்தா வேர் சாறு’ என்று இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ‘அஸ்வகந்தா சாறு’ என்று மட்டும் இருந்தால் அதில் இலைகள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.