பஞ்சாப், பதிண்டா மாவட்டத்தில் உள்ள மவுண்ட் மண்டி கிராமத்துப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பெண்ணிற்கு, அதே பள்ளியில் பணியாற்றும் மூத்த கணித ஆசிரியர் ஒருவரால் நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளியில் அறிவியல் ஆய்வகப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, அலமாரியைச் சரிபார்க்க வேண்டும் என அந்த ஆசிரியையை ஆய்வகத்திற்குத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார் அந்த நபர். அங்கு வைத்து அநாகரீகமாகப் பேசியதுடன், ஆசிரியையின் கையைப் பிடித்து இழுத்து அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

​தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே ஓடிவந்த ஆசிரியையை, “இதை வெளியில் சொன்னால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என அந்த நபர் மிரட்டியும் உள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது குடும்பத்தினரிடம் கூறி, தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் பள்ளியில் நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.