பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், இந்து கடவுள்களான ராமர் மற்றும் லட்சுமணர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவருக்கு ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து கடவுள்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மேலும் பிரகாஷ் ராஜின் பேச்சு இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இதற்காக நடிகர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள பிரகாஷ் ராஜின் இல்லத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே சமூக மற்றும் அரசியல் ரீதியான கருத்துக்களுக்காகப் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வரும் பிரகாஷ் ராஜிற்கு, தற்போது எழுந்துள்ள இந்த 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு மற்றும் சட்ட ரீதியான நெருக்கடிகள் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
