இந்தியக் குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அல்லது அலுவல் நிமித்தமாகச் செல்லும்போது, வருமான வரித் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (ITCC) பெறுவது கட்டாயம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் ‘பொய்யானது’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சமூக வலைதளங்களில் ‘சர்தக் அஹுஜா’ (@casarthakahuja) என்ற பிரபல நிதி ஆலோசகர் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் வருமான வரித் துறையிடமிருந்து அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி, வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்த இந்தியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) மற்றும் வருமான வரித் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், வருமான வரிச் சட்டம் 230(1A)-ன் படி, 2003-ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் உள்ள விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடுமையான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். ரூ. 10 லட்சத்திற்கு மேல் வரி நிலுவை வைத்து, அதற்கு இடைக்காலத் தடை எதுவும் பெறாதவர்கள் ஆகியோருக்கு தான் இது பொருந்தும்.

பொதுவான சுற்றுலாப் பயணிகள் அல்லது வேலை நிமித்தமாகச் செல்பவர்கள் எவ்விதச் சான்றிதழும் பெறத் தேவையில்லை. தனது வீடியோவை ‘பொய்’ (Fake) என்று அரசு முத்திரை குத்தியதற்கு சர்தக் அஹுஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது 90 விநாடி வீடியோவில் முதல் 18 விநாடிகளை மட்டுமே பார்த்துவிட்டு அரசு முடிவெடுத்துள்ளதாகவும், முழு வீடியோவில் விளக்கங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், அவரது ஆதரவாளர்களே அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். “ஆரம்பத்திலேயே ‘எல்லோரும் சான்றிதழ் பெற வேண்டும்’ என கிளிக்-பைட் (Click-bait) பாணியில் பேசிவிட்டு, இப்போது விளக்கம் கொடுப்பது தவறு. உங்களின் வீடியோ எங்களைப் போன்ற சாதாரண மக்களைப் பீதியடையச் செய்துவிட்டது” எனப் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.