இணையதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே நமது மனசாட்சியைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில், பசியால் தவித்த கன்றுக்குட்டிகளுக்கு சிறுவன் ஒருவன் உதவி செய்யும் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
பொதுவாக ஆபத்தில் இருப்பவர்களையோ அல்லது தேவையில்லாத பிரச்சனைகளையோ கண்டால், இன்றைய காலத்தில் பலரும் அதை வேடிக்கை பார்ப்பது அல்லது வீடியோ எடுப்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால், மிகச் சிலரே தாமாக முன்வந்து உதவி செய்கின்றனர். அத்தகைய மனிதாபிமானத்தை இந்தச் சிறுவன் நிரூபித்துக் காட்டியுள்ளான்.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த வீடியோவில், இரண்டு சிறுவர்கள் மரத்தடியில் ஒரு மேடை போன்ற பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஒரு இளங்கன்று, மரத்திலுள்ள இலைகளைப் பறித்து உண்ண முயற்சி செய்கிறது. ஆனால், கன்றுக்குட்டியின் உயரம் குறைவாக இருந்ததால், அதனால் இலைகளை எட்ட முடியவில்லை.
இதனைப் பார்த்த அந்தச் சிறுவன், விளையாட்டை நிறுத்திவிட்டு உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கினான். தனது முழு பலத்தையும் பயன்படுத்தி மரக்கிளையைப் பிடித்துத் தொங்கி, அதை கீழே வளைத்தான். கிளை கீழே வந்தவுடன், கன்றுக்குட்டி மிக எளிதாக இலைகளைச் சாப்பிடத் தொடங்கியது. இதைப் பார்த்தவுடன் மேலும் இரண்டு பசுக்களும் அங்கு ஓடி வந்து இலைகளை உண்ணத் தொடங்கின.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் அந்தச் சிறுவனை மனதாரப் பாராட்டி வருகின்றனர். இவன் தான் உண்மையான கோ-ரட்சகன் (பசுக்காவலன்)” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இவன் இறக்கையில்லாத தேவதை” என நெகிழ்ந்துள்ளார். பலரும் அந்தச் சிறுவனை “கலியுக கிருஷ்ணன்” என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
