உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், மனைவியுடனான தனது அந்தரங்க வீடியோவைப் படம்பிடித்து, அதனைத் தனது காதலிக்கு அனுப்பிய கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பப்போவதாகக் காதலி மிரட்டியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் டெல்லியைச் சேர்ந்த கௌரவ் ஜெயின் என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான முதல் மூன்று மாதங்கள் வாழ்க்கை சுமுகமாகச் சென்ற நிலையில், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மனைவி கண்டுபிடித்தார். இதனை அவர் தட்டிக்கேட்டபோது, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணைச் சித்திரவதை செய்து வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர். தற்போது அந்தப் பெண் தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸாரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, திருமணமான தொடக்க காலத்திலேயே, எனது கணவர் தனது காதலியுடன் சேர்ந்து ஒரு சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளார். எங்கள் அறையில் ரகசிய கேமராவை மறைத்து வைத்து, எனது அனுமதியின்றி எங்களது அந்தரங்கத் தருணங்களைப் படம்பிடித்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை அவர் தனது காதலிக்கு அனுப்பியுள்ளார்.

சமீபத்தில், அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்ட கணவரின் காதலி, குறிப்பிட்ட அந்த வீடியோவை அனுப்பி மிரட்டியுள்ளார். இதனை நீக்கும்படி அவர் கேட்டபோது, சமூக வலைதளங்களில் வைரலாக்கி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருமணத்திற்கு முன்னதாகவே ‘ப்ரீ வெடிங்’ (Pre-wedding) படப்பிடிப்பின் போது, தனது கணவர் அந்தப் பெண்ணுடன் வீடியோ காலில் பேசுவதை மனைவி கவனித்துள்ளார். அப்போதே இது குறித்துக் கேட்டபோது, தனக்கு அந்தப் பெண்ணுடன் தவறான தொடர்பு ஏதுமில்லை என கௌரவ் ஜெயின் பொய் கூறியுள்ளார். வரதட்சணையை அபகரிக்கும் நோக்கிலேயே அவர் தன்னைத் திருமணம் செய்துகொண்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, கௌரவ் ஜெயின் மற்றும் அவரது காதலி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், “இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்தச் சம்பவம் ஆக்ரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.