பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம், பெண் குழந்தைகளைக் காப்போம்”என்ற கோஷங்கள் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 67 ஆண்டுகளாக மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கல்வாரி பகுதியில் அமைந்துள்ள ‘ஜின்கு லால் திரிவேணி ராம் சவுத்ரி’ இடைநிலைக் கல்லூரி, கடந்த 1957-ஆம் ஆண்டே இருபாலர் பயிலும் (Co-ed) பள்ளியாக அரசு அங்கீகாரம் பெற்றது. ஆனால், அன்று முதல் இன்று வரை அங்கு ஒரு மாணவி கூட அனுமதிக்கப்படவில்லை. பள்ளி வளாகத்தில் ‘மாணவிகளுக்கான கழிப்பறை இல்லை’ என்பதைக் காரணமாகக் கூறி, நிர்வாகம் மாணவிகளின் சேர்க்கையைத் தடுத்து வருகிறது.
இந்த அறிவிக்கப்படாத தடைக்கு பின்னால் ஒரு வணிகச் சதி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தப் பள்ளி நிர்வாகியே இதற்கு அருகிலேயே ஒரு தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். அரசு பள்ளியில் மாணவிகளைச் சேர்த்தால் சொற்பமான கட்டணமே வசூலிக்க முடியும் என்பதால், ‘கழிப்பறை இல்லை’ என்ற காரணத்தைச் சொல்லி, மாணவிகளைத் தனது தனியார் பள்ளிக்குச் செல்லுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. தனியார் பள்ளியில் அதிக கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவிகள் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தனது மகளை எப்படியாவது இந்த அரசுப் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்று உறுதிபூண்ட ஒரு தந்தை, அதிகாரிகளின் கல்நெஞ்சைக் கரைக்க ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார். “கழிப்பறை இல்லை என்பதுதானே உங்கள் பிரச்சனை?” எனக் கூறி, ஒரு புதிய கழிப்பறை கோப்பையை தனது மிதிவண்டியில் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்து அதிகாரிகளிடம் வழங்கினார். “இந்த இருக்கையைப் பயன்படுத்தியாவது கழிப்பறையை அமைத்து என் மகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்” என அவர் கெஞ்சியபோதும், பள்ளி நிர்வாகம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.
இது குறித்துப் பள்ளியின் தலைமையாசிரியர் ஆக்யாராம் சவுத்ரி கூறுகையில், “பள்ளியில் மாணவிகளுக்கான கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் வசதி இல்லை என்பது உண்மைதான். பாதுகாப்பு காரணங்களுக்காகவே மாணவிகளைச் சேர்க்கவில்லை. கடந்த 2021-2022 காலக்கட்டத்தில் 60-70 மாணவிகளைச் சேர்த்தோம், ஆனால் அதன் பிறகு யாரும் விண்ணப்பிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பஸ்தி மாவட்ட கல்வி அதிகாரி சஞ்சய் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். “இது மிகவும் கடுமையான விஷயம். பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாகுபாடு காட்டப்படுவது உறுதி செய்யப்பட்டால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன், நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார். மேலும் நவீன இந்தியாவில், ஒரு கழிப்பறையைக் காரணமாகக் காட்டி பல தசாப்தங்களாகப் பெண் கல்வி மறுக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
