சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ‘ஹியூமனாய்டு ரோபோ ஹாஃப் மாரத்தான்’ போட்டி, ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 12,000 மனித ஓட்டப்பந்தய வீரர்களுடன் இணைந்து 100-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இதில் ‘ஹானர்’ என்ற சீன நிறுவனம் தயாரித்த ‘லைட்னிங்’ என்ற ரோபோ, 21.1 கி.மீ தூரத்தை வெறும் 50 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இது மனித உலக சாதனையான 57 நிமிடம் 20 வினாடிகளை விட சுமார் 7 நிமிடங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே போட்டியில் ஒரு ரோபோ 2 மணி நேரம் எடுத்துக்கொண்ட நிலையில், இந்த ஆண்டு ரோபோக்கள் காட்டிய வேகம் அனைவரையும் மிரள வைத்துள்ளது.
இந்த மாரத்தானில் பங்கேற்ற ரோபோக்களில் 40 சதவீத ரோபோக்கள் எந்தவித ரிமோட் கட்டுப்பாடும் இன்றி, ஏஐ மற்றும் சென்சார்கள் மூலம் தானாகவே பாதையைக் கண்டறிந்து ஓடின. மனிதர்களின் ஓட்டத் திறனை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் 95 செ.மீ நீளமுள்ள கால்களுடன் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ‘லிக்விட் கூலிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஓடும்போது ஏற்படும் வெப்பத்தை இவை கட்டுப்படுத்தின. முதல் மூன்று இடங்களையும் ‘ஹானர்’ நிறுவனத்தின் ரோபோக்களே தட்டிச் சென்றன. ஒரு ரோபோ சுமார் 48 நிமிடங்களில் இலக்கை எட்டினாலும், அது தானியங்கி முறையில் ஓடாததால் அதற்கு வெற்றி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ரோபோக்களின் இந்த அதிரடி வளர்ச்சி ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் மனிதர்களின் வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் ஏஐ-ன் ஆதிக்கம் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது. சீனா தனது தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு நிரூபிக்க இத்தகைய போட்டிகளில் அதிக முதலீடு செய்து வருகிறது. அஜிபாட், யூனிட்ரீ போன்ற சீன நிறுவனங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ரோபோக்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றன.
“இது வெறும் ஆரம்பம்தான், எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் முதல் சாலை போக்குவரத்து வரை ரோபோக்கள் மயமாகும்” என நிபுணர்கள் கணித்துள்ளனர். மாரத்தான் பாதையில் ஒரு ரோபோ டிராபிக் போலீஸாக மாறி சைகைகள் மூலம் வழிகாட்டியது எதிர்கால உலகிற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.
