ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு பாதுகாப்பு சேவைகளுக்காக கட்டணம் செலுத்த முன்வரும் கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடப்போவதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்வதாகவும், அந்த வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி, ஈரானின் ஒழுங்குமுறைகளை ஏற்று பாதுகாப்பு கட்டணம் செலுத்தும் கப்பல்களுக்கு ஜலசந்தியை கடந்து செல்ல முதலிடம் வழங்கப்படும் என ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாறாக, கட்டணம் செலுத்த மறுக்கும் கப்பல்களின் பயணம் தள்ளிவைக்கப்பட்டு, அவற்றிற்கான அனுமதி பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஈரானின் இந்த முடிவு சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளன.