தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், அதிமுக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி-யை கடுமையாக விமர்சித்துள்ளார். “தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் பிஸியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென வந்து நின்றால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா? மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒரு இயக்குநர் ஆவதற்குப் பல வருடங்கள் உழைத்து அனுபவம் பெறும் நீங்கள், அரசியல் மற்றும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக ஒருமுறை கூடக் குரல் கொடுக்காமல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் எப்படி உடனடியாக எம்.எல்.ஏ ஆகிவிட முடியும் என்று பிரகாஷ் ராஜ் சாடினார்.

மேலும், சுந்தர் சி-யின் மனைவி குஷ்பு கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தனை காலம் அரசியலில் இருக்கும் குஷ்புவுக்குக் கிடைக்காத வாய்ப்பு, திடீரென வந்த உங்களுக்கு எப்படித் தரப்பட்டது என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா எனக் கேள்வி எழுப்பினார்.

இதனால் புதிய நீதிக்கட்சியின் கொள்கைகள் என்னவென்று தெரியுமா எனக் கேட்டதுடன், மக்களின் நலனுக்காக உழைப்பவர்களுக்கே தனது ஆதரவு என்றும், தான் எந்தக் கட்சிக்கும் அடிமை கிடையாது என்றும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார். பிரகாஷ் ராஜின் இந்த அடுக்கடுக்கான கேள்விகள் தேர்தல் பிரசாரக் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.