இயற்கையின் சீற்றம் எப்போது யாரை எப்படித் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதற்குச் சாட்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. மொராதாபாத்தின் முண்டாபாண்டே பகுதியில் உள்ள தல்பத்பூர் கிராமத்தைச் சேர்ந்த இதரீஸ் மற்றும் அவரது மனைவி பாத்மா ஆகியோர் நேற்றிரவு தங்கள் வீட்டின் முற்றத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வீசிய கடும் காற்று மற்றும் புயல் காரணமாக, அண்டை வீட்டின் பழைமையான சுவர் பலத்த சத்தத்துடன் உறங்கிக் கொண்டிருந்த தம்பதி மீது சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய இதரீஸ் மற்றும் பாத்மா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே முற்றத்தின் மற்றொரு பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இவர்களது 8 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமுமின்றி உயிர் தப்பினர். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் தங்கள் கண் முன்னாலேயே பெற்றோரைப் பறிகொடுத்த அந்தக் குழந்தைகளின் அழுகுரல் கிராமத்தையே உலுக்கியுள்ளது.

தற்போது அந்த 8 குழந்தைகளும் அநாதையாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தகுந்த இழப்பீடும் உதவியும் வழங்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.