மத அடையாளங்களான பொட்டு, திலகம் மற்றும் குங்குமம் வைப்பதற்குத் தடை விதித்துள்ளதாக ஏர் இந்தியா மற்றும் லென்ஸ்கார்ட் நிறுவனங்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டாட்டா குழுமத்திற்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் விமானப் பணிப்பெண்களுக்கான புதிய வழிகாட்டு கையேடு என சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதில், பணியின் போது ஊழியர்கள் பொட்டு, சிந்துர் (குங்குமம்), திலகம் மற்றும் கையில் கட்டும் காப்புச் சரடு ஆகியவற்றை அணிய அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், “இந்திய கலாச்சாரத்தின் அடையாளங்களைத் தடை செய்வது அநாகரிகமானது” என்று கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, மற்ற மத அடையாளங்களுக்கு அனுமதி இருக்கும்போது, போட்டு மற்றும் சிந்துருக்கு மட்டும் ஏன் தடை? என்ற கேள்வியையும் எழுப்பினர். சர்ச்சை வலுக்கவே, ஏர் இந்தியா நிர்வாகம் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. அதில், “தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் பழைய கையேட்டில் உள்ளவை. அவை இப்போது நடைமுறையில் இல்லை. ஊழியர்கள் பொட்டு  வைக்க தடை ஏதுமில்லை,” என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதே போன்ற ஒரு சர்ச்சை கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான ‘லென்ஸ்கார்ட்’ (Lenskart) மீதும் எழுந்தது. அந்த நிறுவனத்தின் வழிகாட்டுதலில், பெண் ஊழியர்கள் ‘ஹிஜாப்’ அணியலாம் என்றும், ஆனால் பொட்டு மற்றும் திலகம் இடுவதற்குத் தடை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மதப் பாகுபாட்டைத் தூண்டுவதாகக் கூறி, அந்நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும்என்ற ஹேஷ்டேக் வைரலானது. இதற்கு விளக்கம் அளித்த லென்ஸ்கார்ட் நிறுவனர் பியூஷ் பன்சல், “பரப்பப்படும் தகவல்கள் பழையவை. அவை நிறுவனத்தின் தற்போதைய கொள்கைகளை பிரதிபலிக்கவில்லை. லென்ஸ்கார்ட் எப்போதும் அனைத்து மதத்தினரையும் சமமாகவே நடத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார். மேலும் பழைய ஆவணங்கள் மீண்டும் வைரலாவதன் மூலம் இந்த முன்னணி நிறுவனங்கள் தேவையற்ற தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளன.