தாய்மையின் இலக்கணமாகக் கருதப்படும் தாய் ஒருவரே, தனது மகளைப் புகுந்த வீட்டிற்குச் சென்று கொடூரமாகத் தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் குவித்து வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் மரக்கட்டையால் இளம்பெண் ஒருவரைப் படுக்கையில் வைத்து இரக்கமின்றித் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தாக்குதலுக்குள்ளான அந்தப் பெண் வலியால் துடிப்பதோடு, தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுவதும் வீடியோவில் கேட்கிறது. அங்கிருக்கும் நபர் ஒருவர் தடுத்தும், அந்தத் தாய் ஆவேசத்துடன் தாக்குதலைத் தொடர்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களின்படி, அந்த இளம்பெண் தனது புகுந்த வீட்டில் மாமனார், மாமியாருக்குச் சமைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அவரது தாய்க்குத் தெரியவரவே, ஆத்திரமடைந்த அவர் நேராக மகளின் புகுந்த வீட்டிற்கே சென்று, அங்கேயே வைத்து மகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

 

இருப்பினும், இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்தோ அல்லது இந்தச் சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்தோ அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “மகள் தவறு செய்திருந்தாலும், ஒரு தாயே இப்படி அநாகரிகமான முறையில் வன்முறையில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இது ஒரு குடும்ப வன்முறை  என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளையில், வீடியோவின் முழுமையான பின்னணியை ஆராயாமல் முடிவுக்கு வரக்கூடாது என்றும் ஒரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.