மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததோடு, அவரைத் தனது மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நாசிக்கின் பஞ்சவடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, தஞ்ஜீர் இனாம்தார் என்ற இளைஞர் என்னுடன் பழகி வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் என்னை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து, எனது புகைப்படங்களை செல்போனில் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார். ஒரு விடுதிக்கு  என்னை அழைத்துச் சென்ற அவர், அங்கு கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்தார். பின்னர், எனது ஆடைகளை அகற்றி என்னைப் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு, நான் அணிந்திருந்த துளசி மாலை மற்றும் கையில் கட்டியிருந்த புனிதக் கயிற்றை அறுத்தெறிந்த அவர், அவரது மத வழக்கப்படி என்னை ‘கஜவா-இ-ஹிந்த்’ (Gajwa-e-Hind) செய்யும்படி கட்டாயப்படுத்தினார்.”

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் தஞ்ஜீர் இனாம்தார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதிட்ட பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர், “இது ஒரு காதல் விவகாரம். ‘கஜவா-இ-ஹிந்த்’ என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார். இருப்பினும், வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

நாசிக்கில் ஏற்கனவே இது போன்ற ஒரு சம்பவம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த மதமாற்ற முயற்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் இந்து அமைப்புகள் கடும் கொதிப்படைந்துள்ளன. எம்.எல்.ஏ தேவயானி ஃபராண்டே தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பஜ்ரங் தளம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், “திட்டமிட்டு இளம்பெண்களைக் காதல் வலையில் வீழ்த்திச் சுரண்டுவது தொடர்கிறது. இதன் பின்னணியில் உள்ள பொருளாதார பலம் மற்றும் சதி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பின்னால் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா? மதமாற்றம் செய்ய அவர் தூண்டப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியான இத்தகைய சம்பவங்களால் நாசிக் நகரில் தற்போது ஒருவித பதற்றமான சூழல் நிலவுகிறது.