ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, காயத்தால் அவதிப்பட்ட எதிரணி வீரருக்கு குருணால் பாண்டியா உதவிய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் 18 அன்று பெங்களூருவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடிக் கொண்டிருந்தது. ஆட்டத்தின் 14-வது ஓவரில் அதிரடியாக விளையாடத் தொடங்கிய டெல்லி வீரர் அக்சர் படேலுக்கு திடீரென கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும், 16-வது ஓவரில் வலி அதிகமானதால் அவரால் மேற்கொண்டு விளையாடவோ, நடக்கவோ முடியாத சூழல் உருவானது. இதையடுத்து அவர் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ முறையில் மைதானத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அக்சர் படேல் நடக்க முடியாமல் சிரமப்படுவதைக் கண்ட பெங்களூரு அணியின் வீரர் குருணால் பாண்டியா, உடனே ஓடி வந்து அவருக்குத் தோள் கொடுத்தார். தனது அணிக்கு எதிராக விளையாடும் வீரர் என்று பாராமல், மனிதாபிமானத்துடன் அவரைத் தாங்கிப் பிடித்து பெங்களூரு ‘டக்-அவுட்’ வரை அழைத்துச் சென்றார். மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த விளையாட்டு உணர்வை எழுந்து நின்று பாராட்டும் வகையில் கைதட்டி வரவேற்றனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில், “குருணால், எங்கள் மரியாதையைப் பெற்றுவிட்டீர்கள்!” என்று பதிவிட்டு அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. மைதானத்தில் நிலவும் கடும் போட்டிக்கும் அப்பாற்பட்டு வீரர்களிடையே நிலவும் இந்த நட்பு சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
இக்கட்டான நிலையில் அக்சர் படேல் வெளியேறினாலும், டெல்லி அணி நிதானமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 57 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 60 ரன்களும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதி ஓவர்களில் டேவிட் மில்லர் அதிரடியாக 22 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். மேலும் புள்ளிகள் பட்டியலுக்கான போட்டியை விட, குருணால் பாண்டியாவின் இந்த மனிதநேயச் செயல் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
After Axar patel's injury Krunal pandya ran towards him to give him support
A great gesture from Krunal Pandya💖 pic.twitter.com/5kdieruiFf
— ` (@McgMadMan) April 18, 2026
