ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், ஒரு காலத்தில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததும், ஐபிஎல் வாய்ப்புக்காக அவர் மன்றாடியதும் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 2011-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த கெய்ல், நேரடியாக லலித் மோடியைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.
அந்தப் போன் காலில் கெய்ல் உருக்கமாகப் பேசியதாக லலித் மோடி தெரிவித்துள்ளார். “லலித், நான் கடும் கடன் சுமையில் இருக்கிறேன். எனது வீட்டு பில்களைக் கூட கட்ட முடியாமல் தவிக்கிறேன். எனக்கு எப்படியாவது ஐபிஎல் போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பு பெற்றுத் தாருங்கள்” என்று கெய்ல் கெஞ்சியதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
கெய்லின் நிலையை உணர்ந்த லலித் மோடி, பல ஐபிஎல் அணிகளிடம் அவரைச் சேர்த்துக் கொள்ளுமாறு சிபாரிசு செய்துள்ளார். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அப்போதிருந்த எந்த ஒரு அணி உரிமையாளரும் கெய்லைத் தங்கள் அணியில் எடுக்க முன்வரவில்லை.
இறுதியாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அப்போதைய உரிமையாளர் விஜய் மல்லையாவிடம் மோடி பேசியுள்ளார். ஆர்.சி.பி அணியில் ஒரு இடம் காலியாக இருந்ததால், “கெய்லை உங்கள் அணியில் சேர்த்துப் பாருங்கள், அவர் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்” என்று மோடி வற்புறுத்தியுள்ளார். மோடியின் வேண்டுகோளை ஏற்று, விஜய் மல்லையா கெய்லை அணியில் இணைத்தார்.
விஜய் மல்லையா எடுத்த அந்த ஒரு முடிவு கிறிஸ் கெய்லின் வாழ்க்கையையும், ஐபிஎல் வரலாற்றையும் மாற்றியது. ஆர்.சி.பி அணியில் நுழைந்த பிறகு கெய்ல் ஆடிய ஆட்டம் இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாதது. குறிப்பாக, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக அவர் விளாசிய 175 ரன்கள்* இன்றும் உலக சாதனையாக உள்ளது. மேலும் கடனில் தவித்து, வாய்ப்புக்காகப் போராடிய ஒரு வீரர், பின்னாட்களில் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தது ஒரு பெரும் சாதனை பயணமாகும்.
