டெல்லி புராரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 10 வயது மகள் தான்யா, தினமும் பள்ளி முடிந்து வந்ததும் தனது தாத்தாவிடம் பணம் பெற்று வெளியில் மோமோஸ் மற்றும் சிப்ஸ் போன்ற துரித உணவுகளை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமிக்குச் சிறிய விஷயங்கள் கூட மறக்கத் தொடங்கியுள்ளன; உடல் சோர்வு ஏற்பட்டு எழுந்து நடக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனையில், சிறுமிக்குக் கடுமையான மஞ்சள் காமாலை இருப்பதும், மோமோஸ் போன்ற உணவுகளால் கல்லீரல் முழுமையாகச் செயலிழந்து (Liver Failure) உடலில் நச்சுக்கள் பரவி மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு, மருத்துவர்கள் ‘பிளாஸ்மாபெரிசிஸ்’ (Plasmapheresis) என்ற நவீன சிகிச்சை அளித்துக் காப்பாற்றியுள்ளனர்.
டெல்லியில் சுமார் 35 சதவீத குழந்தைகளுக்கு ஃபேட்டி லிவர் அறிகுறிகள் இருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், துரித உணவுகள் மற்றும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையே இதற்குக் காரணம் என எச்சரிக்கின்றனர்.
