ஹாலிவுட்டில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தோழியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராப்பர் ஐஸ் ஸ்பைஸ், எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வாயா’ என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், ஐஸ் ஸ்பைஸ் அமர்ந்திருந்த மேஜையில் அமர முயன்றதாகவும், அதற்கு ஐஸ் ஸ்பைஸ் மறுப்பு தெரிவித்து வெளியேறுமாறு சைகை காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், திடீரென ஐஸ் ஸ்பைஸின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

 

இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ஐஸ் ஸ்பைஸ், சும்மா இருக்காமல் மேஜைகளைத் தாவி குதித்து அந்தப் பெண்ணைப் பிடிக்கத் துரத்தியுள்ளார். இந்த மோதல் உணவகத்திற்கு வெளியே தெருவிலும் நீடித்தது. அப்போது அந்த கும்பலில் ஒருவரின் செல்போனை ஐஸ் ஸ்பைஸ் தட்டிவிட்டு உடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஐஸ் ஸ்பைஸின் வழக்கறிஞர் பிராட்போர்ட் கோஹன் கூறுகையில், “எந்தவித தூண்டுதலும் இல்லாமல் என் கட்சிக்காரர் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், “இந்த சம்பவம் வெண்டிஸ் உணவகத்தில் நடந்திருக்காது” என ஐஸ் ஸ்பைஸ் கிண்டலாகப் பதிவிட்டது இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.