ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்திய எண்ணெய் கப்பல் மீது ஈரான் கடற்படை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

ஈராக் நாட்டிலிருந்து சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யைச் சுமந்து வந்த இந்த வணிகக் கப்பல், ஓமன் அருகே கடந்து சென்றபோது இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியிலுள்ள ஈரான் தூதர் முகமது ஃபத்லியை நேரில் அழைத்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஈரானில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, அந்நாட்டு ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே முறையான தகவல் தொடர்பு இல்லாததே இதுபோன்ற தவறான தாக்குதல்களுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், அந்த வழியாகப் பயணிக்கும் கப்பல்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. தற்போது இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.