மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வரும் நிலையில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீர்சந்தியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீர்சந்தியை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரான் படைகளின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ‘சான்மார் ஹெரால்ட்’ (Sanmar Herald) என்ற கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலும், ‘ஜக் அர்னவ்’ (Jag Arnav) என்ற சரக்குக் கப்பலும் நீர்சந்தியை கடக்காமல் உடனடியாக பின்வாங்கின.
இந்தத் தாக்குதல் முயற்சி மற்றும் வழிமறிப்பு குறித்து பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அமைப்பு (UKMTO) விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்தியக் கப்பல்களும், அவற்றில் பணியாற்றும் இந்திய மாலுமிகள் அனைவரும் தற்போதைய நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படை எங்களது துறைமுகங்களை முற்றுகையிடுவதைக் கைவிடும் வரை, ஹார்முஸ் நீர்சந்தி எங்களது முழு கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அதுவரை இந்த வழித்தடம் மூடப்பட்டிருக்கும் என ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் இந்த நீர்சந்தி முக்கியப் பங்கு வகிப்பதால், ஈரானின் இந்த முடிவும், இந்தியக் கப்பல்கள் மீதான நடவடிக்கையும் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்துத் தீவிரமாக நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
