நவீன வாழ்க்கை முறையில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், டெல்லியில் மொமோஸ் சாப்பிட்ட 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி ஒட்டுமொத்தப் பெற்றோர்களையும் அதிர வைத்துள்ளது. புராரி பகுதியைச் சேர்ந்த தன்யா என்ற அந்தச் சிறுமி, பள்ளி முடிந்து வந்ததும் தனது தாத்தாவிடம் பணம் வாங்கித் தொடர்ந்து மொமோஸ் மற்றும் சிப்ஸ் வகைகளைச் சாப்பிட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமிக்குக் கடுமையான மஞ்சள் காமாலை ஏற்பட்டு, கல்லீரல் முற்றிலும் செயலிழந்தது. உடலில் நச்சுக்கள் அதிகரித்ததால் மூளையில் வீக்கம் ஏற்பட்டு, சிறுமியால் நடக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவர்கள் ‘பிளாஸ்மாபெரிசிஸ்’ என்ற நவீன சிகிச்சை மூலம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி உயிரைக் காப்பாற்றியுள்ளனர். “டெல்லியில் உள்ள 35 சதவீத குழந்தைகளுக்கு ஃபேட்டி லிவர் அறிகுறிகள் தென்படுகின்றன. இதற்குத் துரித உணவுகளே முக்கியக் காரணம்” என குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சைலேஷ் சர்மா எச்சரித்துள்ளார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை சென்ற இந்தச் சம்பவம், குழந்தைகளிடம் ஃபாஸ்ட் ஃபுட் பழக்கத்தைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியம் என்பதை உரக்கச் சொல்லியுள்ளது.
