ஒரு தட்டு பிரியாணிக்காகப் பல நாட்கள் ஏங்கிய மகனின் ஆசையை, வறுமைக்கு மத்தியிலும் ஒரு தந்தை நிறைவேற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது. தந்தை – மகன் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அதாவது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் நாராயண் சர்க்கார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. அன்றாடக் கூலி வேலை செய்து வரும் இவர், பகுதி நேரமாக யூடியூப் (YouTube) பக்கத்திலும் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார். குடும்பத்தின் கடன் மற்றும் வீட்டுத் தவணை (EMI) உள்ளிட்ட நிதி நெருக்கடிகளால் நாராயண் சர்க்கார் கடும் சிரமத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நாராயணின் சிறுவயது மகன் கடந்த சில நாட்களாக பிரியாணி சாப்பிட வேண்டும் என்று தந்தையிடம் அடம் பிடித்து வந்துள்ளான். ஆனால், 200 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்து பிரியாணி வாங்கித் தரும் வசதி நாராயணிடம் அப்போது இல்லை. மகனின் ஆசையைத் தள்ளிப்போட முடியாமல் தவித்த அந்தத் தந்தை, ஒரு வழியாக அதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.

சமீபத்தில் ஒரு நாள் நாராயண் சந்தைக்குச் சென்றபோது, அங்கிருந்த உணவகம் ஒன்றில் வார நாட்களை முன்னிட்டு பிரியாணிக்குச் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்த விலையில் பிரியாணி கிடைப்பதைக் கண்ட நாராயண், உடனடியாகத் தலா மூன்று பொட்டலங்கள் பிரியாணியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Narayan Sarkar (@naryansarkar8967)

வீட்டிற்குச் சென்றதும் பிரியாணி பொட்டலத்தை மகனிடம் கொடுத்தார். பல நாட்கள் ஏங்கிய உணவு கிடைத்ததும், அந்தச் சிறுவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகன் ஆசை தீரப் பிரியாணி சாப்பிடுவதைக் கண்ட தந்தை நாராயண், மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைத் தனது கேமராவில் பதிவு செய்து, வங்க மொழியில் தனது கதையை விவரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “ஒரு தந்தையின் அன்பு விலைமதிப்பற்றது” என்று நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும்  நாராயண் சர்க்காரின் நிதி நெருக்கடிகள் விரைவில் நீங்கி, அவரது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.