சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் சட்டவிரோத மனிதக் கடத்தல் நெட்வொர்க்கை நடத்தி வந்த கும்பலின் முக்கியக் கண்ணியான ராஜவிந்தர் கவுர், ஒருவழியாக டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குர்தீஷ் என்பவர் போலி விசாவுடன் கனடா செல்ல முயன்றபோது உளவுத்துறை அதிகாரிகளிடம் (IB) சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான், சீனாவுடன் தொடர்புடைய இந்த மிகப்பெரிய கடத்தல் கும்பலின் பின்னணி அம்பலமானது.
ராஜவிந்தர் கவுர், அவரது கணவர் சுக்தேவ் சிங் மற்றும் அசோக் ஆகிய மூவரும் இணைந்து இந்த கும்பலை இயக்கி வந்தனர். குர்தீஷ் அளித்த தகவலின்படி போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியபோது, அதற்குள்ளாகவே இவர்கள் மூவரும் தலைமறைவாகிவிட்டனர்.
2012 மற்றும் 2013-ல் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இவர்களைப் பிடிக்க, போலீஸார் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் ரகசிய ஒற்றர்களைப் பயன்படுத்தித் தொடர்ந்து தேடி வந்தனர்.
சுமார் 25 வருட போராட்டத்திற்குப் பிறகு, ராஜவிந்தர் கவுர் புது டெல்லி ரயில் நிலையத்திற்கு வரப்போவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீஸார் அவரை வெற்றிகரமாகக் கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
