பிரபல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் அபூர்வா மகிஜா, தனது ஆடை அலங்காரத்திற்காகப் புனிதமாகக் கருதப்படும் ‘கலவா’ என்கிற காப்பு கயிறு நூலை அறுத்தெறிந்த சம்பவம், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ‘தி ரிபெல் கிட்’ (The Rebel Kid) என்ற பெயரில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளவர் அபூர்வா மகிஜா. இவர் அமெரிக்காவில் நடைபெறும் புகழ்பெற்ற ‘கோச்செல்லா’  இசைத் திருவிழாவிற்குச் செல்வதற்காகத் தயாராகும் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில், தனது கையில் கட்டப்பட்டிருந்த ‘கலவா’ எனப்படும் புனிதமான சிவப்பு நிறக் காப்புக் கயிறு, தான் அணிந்திருக்கும் ஆடைக்குத் தகுந்தபடி  இல்லை எனக் கூறி, அதனை ஒரு கத்தரிக்கோலால் துண்டித்தார். பொதுவாக இந்து மதச் சடங்குகளின் போது கட்டப்படும் இந்தக் கயிறு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இந்தச் செயல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பல பயனர்கள் அபூர்வாவின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “வெறும் பார்வையாளர்களையும், லைக்குகளையும் பெறுவதற்காக மதச் சடங்குகளை அவமதிப்பதா?” என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொரு பயனர் கூறுகையில், “அவருக்கு கயிறு பிடிக்கவில்லை என்றால் கேமராவிற்குத் தெரியாமல் அதை அகற்றியிருக்கலாம். ஆனால், இதையும் ஒரு ‘கண்டெண்ட்’ ஆக மாற்றி வீடியோ எடுத்தது அநாகரீகமானது” எனச் சாடியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Apoorva (@the.rebel.kid)

அபூர்வா மகிஜா ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த வீடியோ, அவரது பின்தொடர்பவர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமுறையினர் இவரைப் பின்பற்றுவதால், இது போன்ற தவறான முன்னுதாரணங்களை இன்ஃப்ளூயன்சர்கள் தவிர்க்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து அபூர்வா தரப்பிலிருந்து இதுவரை முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. இருப்பினும், இணையத்தில் அவருக்கு எதிரான ‘ட்ரோல்கள்’  மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.