சுமார் 40 டிகிரி சுட்டெரிக்கும் வெயிலில், ஒரு வெறிச்சோடிய மொட்டை மாடியில் ஆடைகளின்றி, எலும்பும் தோலுமாய்க் கிடந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் மீட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண், அதிகாரிகளைக் கண்டதும் கேட்ட முதல் வார்த்தை: “பசிக்குது… சாப்பாடு என்பது தான்.

அதாவது சீமா சோனி (40) என்ற பெண், கடந்த 4 முதல் 5 மாதங்களாகத் தனது வீட்டின் மொட்டை மாடியிலேயே திறந்த வெளியில் தவிக்க விடப்பட்டுள்ளார். இது குறித்துத் தகவல் கிடைத்ததும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை திட்ட அலுவலர் தீபிகா நாம்தேவ், காவல் ஆய்வாளர் புஷ்பா சிங் மற்றும் வழக்கறிஞர் மீனு லால்வானி ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிகாரிகளையே நிலைகுலைய வைத்தது. போதிய உணவின்றி, ஒரு அழுக்கடைந்த போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு, எலும்புக்கூடு போலச் சீமா கிடந்துள்ளார். பல மாதங்களாகக் குளிக்காமலும், முறையான பராமரிப்பு இல்லாமலும் அவர் அங்கே நரக வேதனையை அனுபவித்துள்ளார். சீமாவை மீட்ட அதிகாரிகள், அவருக்கு உடனடியாக உணவும் நீரும் வழங்கினர். தற்பொழுது அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்துத் திட்ட அலுவலர் தீபிகா நாம்தேவ் கூறுகையில்,

தகவல் கிடைத்து நாங்கள் சென்றபோது, வீடியோவில் பார்த்ததை விட நிலைமை மிக மோசமாக இருந்தது. அந்தப் பெண் பேசுகிறார், ஆனால் அவர் நீண்ட நாட்களாகக் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பது போலத் தெரிகிறது. தற்பொழுது அவருக்குச் சிறந்த சிகிச்சை அளிப்பதே எங்களின் முதல் நோக்கம் என்றார். சீமா முன்பு மிகவும் சகஜமாகப் பழகக்கூடியவர் என்றும், திடீரென அவர் வெளியே வருவதை நிறுத்தியதால் அவர் எங்கோ சென்றுவிட்டார் என நினைத்ததாகவும் அண்டை வீட்டார் தெரிவித்தனர்.

சீமாவின் கணவர் அஜித் சோனி கூறுகையில், “எனது மனைவிக்கு 2016-ஆம் ஆண்டு முதல் மனநலப் பாதிப்பு உள்ளது. அகமதாபாத் மற்றும் குவாலியரில் அவருக்குச் சிகிச்சை அளித்தோம். வீட்டில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அவரை மொட்டை மாடியில் தங்க வைத்திருந்தோம். நாங்கள் அவரைப் பராமரித்துதான் வந்தோம்,” என்று தெரிவித்தார்.

இருப்பினும், கணவரின் கூற்றை அதிகாரிகள் ஏற்கவில்லை. ஒரு நோயாளி பெண்ணை இவ்வளவு அமானுஷ்யமான நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் ஆடைகளின்றி வைத்திருந்தது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இது ‘பராமரிப்பு’ அல்ல, ‘கொடுமை’ என்றே அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும் ஒரு மனிதர் உயிருடன் இருக்கும்போதே, சக மனிதர்களால் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.