ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), மீண்டும் ஒரு மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 16,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் டிசிஎஸ் (TCS) நிறுவனம் தனது ஆட்குறைப்பு முடிவை திரும்பப் பெற்ற நிலையில், மெட்டா நிறுவனம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனம் சுமார் 200 பில்லியன் டாலர் வருவாயும், 60 பில்லியன் டாலர் லாபமும் ஈட்டியுள்ளது. இவ்வளவு பெரிய லாபத்தைப் பெற்ற பின்னரும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அந்நிறுவனம் 21,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மெட்டா அதிபர் மார்க் ஜுக்கர்பெர்க், ‘செயல்திறன் ஆண்டு’ (Year of Efficiency) என்பதைக் கடந்து, தற்போது ‘ஏஐ ஃபர்ஸ்ட்’ (AI First) என்ற தொலைநோக்குப் பார்வையில் செயல்பட்டு வருகிறார். AI தொழில்நுட்பத்திற்காக பல பில்லியன் டாலர்களை ஜுக்கர்பெர்க் முதலீடு செய்து வருகிறார். இதன் மூலம் குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிக வேலைத்திறனைப் பெற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே வரும் மே 20-ஆம் தேதி முதல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கக்கூடும்.
முதற்கட்டமாக நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்தினர், அதாவது சுமார் 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம். ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். இதனால் ஒட்டுமொத்தமாக 16,000-க்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் இந்த அதிரடி மாற்றங்கள், மென்பொருள் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
