உடுமலை அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மாமியாரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த மருமகன் அஜ்மத் உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அஜ்மத் உசேனுக்கும், தஸ்லீமா பேகம் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேலும் கடந்த 4 மாதங்களாகக் கருத்து வேறுபாடு காரணமாகத் தனது தாயார் ஆசியம்மாளுடன் வசித்து வந்த தஸ்லீமா பேகம், கணவரை விவாகரத்து செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன், தனது மனைவியைச் சேர்த்து வைக்கக் கோரி மாமியார் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசியம்மாளைச் சரமாரியாகக் குத்தியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பின் தப்பியோடிய அவரை, குதிரையாறு சோதனைச் சாவடி அருகே வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் விசாரணையின் போது, தனது மனைவியுடன் சேர்ந்து வாழத் தடையாக இருந்ததாலும், குழந்தைகளைப் பார்க்க விடாமல் தடுத்ததாலும் மாமியாரைக் கொலை செய்ததாக அஜ்மத் உசேன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.