மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய மூன்று ஆண்டுகளாகத் திட்டம் தீட்டி, அதனை அரங்கேற்றிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்த நவீன் பதிதார் என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் முதலில் இது விபத்து என கருதப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களும், சிசிடிவி காட்சிகளும் இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை உறுதிப்படுத்தின. போலீசாரின் தீவிர விசாரணையில், நவீனின் மனைவி பார்திக்கும் பிரபல ரவுடி முகேஷ் குமாவத்திற்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பே இந்த கொலைக்குக் காரணம் என்று தெரியவந்தது.

இதனால் இவர்களது உறவை நவீன் கண்டித்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் ரகசியமாகத் திட்டம் தீட்டி வந்துள்ளனர். இறுதியில் கூலிப்படையின் உதவியுடன் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மனைவி பார்தி, ரவுடி முகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.