கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், ஒரு வாலிபரின் காதலின் அடையாளமாகத் திகழ்ந்த திருமண மோதிரம் ஆற்றில் விழுந்த நிலையில், ஸ்கூபா வீரர்கள் அதனை மீட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லம் ஆராட்டுப்புழா பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் நாயர் என்பவர், அப்பகுதியில் உள்ள கல்லடா ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது மோதிரம் தண்ணீரில் விழுந்து தொலைந்தது.

மேலும் காதல் திருமணம் செய்துகொண்ட ரஞ்சித்துக்கு, அந்த மோதிரம் தனது மனைவியின் அன்பின் அடையாளமாகவும் சுவாசமாகவும் கருதப்பட்டதால், அதனைத் தேடி பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆற்று நீரில் எவ்வளவு தேடியும் மோதிரம் கிடைக்காததால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர், இறுதியில் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடினார்.

இதனால் ரஞ்சித்தின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட தீயணைப்புத் துறை அதிகாரி, அவரது உண்மையான காதலைப் புரிந்து கொண்டு உதவ முன்வந்தார். இதையடுத்து கொல்லத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஐந்து ஸ்கூபா வீரர்கள், கல்லடா ஆற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மணலைச் சலித்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஸ்கூபா வீரர்களின் விடாமுயற்சியால் ரஞ்சித்தின் ‘காதல் மோதிரம்’ பத்திரமாக மீட்கப்பட்டது. தொலைந்த தனது உயிரான மோதிரம் மீண்டும் கிடைத்ததைக் கண்டு நெகிழ்ந்து போன ரஞ்சித் நாயர், தனது உணர்வுகளுக்கு மதிப்பளித்து உதவிய ஸ்கூபா வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கண்ணீர் மல்க மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.