அரசியலில் அனுபவம் எவ்வளவு முக்கியம் என்பதை நடிகை ஆர்த்தி எளிய உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார். “நேற்று டாக்டர் பட்டம் வாங்கியவரிடம் நாம் சிகிச்சை பெற மாட்டோம், அதேபோல் எல்.எல்.ஆர் எடுத்த டிரைவர் வண்டியில் ஏற நமக்குத் தைரியம் இருக்காது. ஒரு சின்னப் பயணத்திற்கே அனுபவம் தேடும் நாம், ஐந்து ஆண்டுக்கால நாட்டின் எதிர்காலத்தை அனுபவமே இல்லாத ஒருவரிடம் எப்படி ஒப்படைக்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 50 வருடம் நடிப்பில் மட்டுமே இருந்தவர்களுக்கு இப்போது அரசியல் ஆசை வந்துவிட்டதாகவும், ஆனால் 75 வருடம் அரசியலில் ஊறியவர்களுக்கு மட்டுமே மக்களின் நாடித் துடிப்பு தெரியும் என்றும் கூறினார். புதுக்கட்சித் தொடங்குபவர்களை மறைமுகமாகச் சாடும் வகையில் அமைந்த ஆர்த்தியின் இந்த காரசாரமான விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
