இந்திய நாடாளுமன்றத்தில் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அனல் பறக்கும் விவாதத்திற்குப் பிறகு, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் 131-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தது.

மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் விழுந்தன. அரசியலமைப்பு திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா நிறைவேறாமல் போனது, இந்தியப் பெண்களின் நீண்டகாலக் கனவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

“பெண்களின் உரிமையைப் பறித்த எதிர்க்கட்சிகளுக்கு, வரும் 2029 மக்களவைத் தேர்தலில் இந்தியப் பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று எச்சரித்த அவர், பாஜக நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அறிவித்தார்.

மேலும், 2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை உறுதி செய்யப்படும் என்றும், அப்போது எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான இடங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.