ரயிலில் பயணம் செய்யும் போது ஜன்னல் ஓரம் அமர்ந்து காரசாரமான சுண்டல் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பார்த்தால், இனி ரயிலில் எதையும் வாங்கிச் சாப்பிடவே உங்களுக்குக் கூச்சமாக இருக்கும். அந்த வீடியோவில், ஒரு ரயில்வே உணவு விற்பனையாளர் மிகவும் அசுத்தமான முறையில் உணவைத் தயாரிப்பது பதிவாகியுள்ளது.

அந்த நபர் ரயிலின் கழிவறைக்கு (Toilet) மிக அருகிலேயே தரையில் அமர்ந்து, பயணிகள் மிதித்துச் செல்லும் அதே அசுத்தமான தரையில் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கிறார்.

பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் அதிகம் நிறைந்த இடமான கழிவறை அருகே, எவ்வித சுகாதாரப் பாதுகாப்புமின்றி உணவுப் பொருட்கள் தரையில் பரப்பப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள பலரும், “இதைச் சாப்பிட்டவர்களுக்கு என்ன ஆகுமோ?” என்றும், “ரயில்வே நிர்வாகம் இத்தகைய விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்பே எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும், தற்போது மீண்டும் வைரலாகி வரும் இந்த காட்சி, ரயில் பயணத்தின் போது நாம் வாங்கும் உணவுகளின் தரம் குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.