கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகரில், காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள தனியார் டயர் கடையில் வேலை பார்த்து வந்த பூமிகா என்ற பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த டோங்ரிசாப் என்ற ஆட்டோ டிரைவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆரம்பம் முதலே இவர்களது காதலுக்குப் பூமிகாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெற்றோர் கண்டித்த பிறகும் பூமிகா தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். “டோங்ரிசாப்பைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன்” என அவர் பிடிவாதம் பிடித்துள்ளார்.

ஆனால், மதக் காரணங்களை முன்வைத்து பெற்றோர் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டதால், கடந்த சில நாட்களாக பூமிகா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூமிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, காதலன் டோங்ரிசாப்பிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மதங்களைக் கடந்த காதல், ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.