ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டம் கனோட் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் குடியிருப்பில், அனிதா மீனா என்ற செவிலியர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர் மருத்துவர் சுரேந்திர பிஜார்னியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மருத்துவரின் அரசு குடியிருப்பிலேயே அனிதா தங்கியிருந்த நிலையில், தற்போது அந்த வீட்டின் படிக்கட்டுப் பகுதியில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அனிதாவின் கழுத்தில் காயங்கள் இருப்பதால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் அடிப்படையில் மருத்துவர் சுரேந்திர பிஜார்னியாவைக் காவல்துறையினர் தடுத்து வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது உறுதியாகத் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.