உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் திடீரென வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான ஹரியானாவில் குறைந்தபட்ச ஊதியம் 35% உயர்த்தப்பட்ட நிலையில், தங்களுக்கும் அதேபோல் உயர்வு வேண்டுமெனக் கோரி உ.பி. ஊழியர்கள் வீதியில் இறங்கினர். ஆனால், அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் வன்முறையாகத் திசைமாறியதற்குப் பின்னால் பாகிஸ்தானின் சதி இருப்பதாகக் காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல் இப்போது ‘பகீர்’ கிளப்பியுள்ளது.

​தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் வன்முறையைத் திட்டமிட்டு அரங்கேற்றிய அந்நிய சக்திகள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஹரியானா பாஜக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பைக் காரணமாக வைத்து, உத்தரப்பிரதேசத்தின் அமைதியைக் குலைக்கச் சதி நடந்திருப்பதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். நொய்டாவில் நடந்த இந்தத் தீ வைப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்களால் அந்தப் பகுதியே தற்போது போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.