கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு பகுதியில், ஃபிரைடு ரைஸில் சிக்கன் குறைவாக இருந்ததாகக் கூறி உணவகத்தை அடித்து நொறுக்கிய நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிப்பாடில் உள்ள ‘சிக்கன் சிகாகோ’ என்ற உணவகத்திற்கு வியாழக்கிழமை மதியம் பிக்கப் வேனில் வந்த நபர் ஒருவர், சிக்கன் ஃபிரைடு ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். உணவைப் பரிமாறியபோது அதில் கோழித் துண்டுகள் குறைவாக இருப்பதாகக் கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த உணவக மேலாளர் கூடுதல் சிக்கன் தருவதாகக் கூறியும் கேட்காத அந்த நபர், ஆத்திரத்தில் உணவை மேசையிலிருந்து தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு நிற்காமல், பணக் கவுண்டரில் இருந்த பெண் ஊழியரை மிக ஆபாசமாகத் திட்டி, அவரது சட்டையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றதோடு, அங்கிருந்த கணினியையும் அடித்து நொறுக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உணவகத்திற்கு சுமார் 35,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில் ஹரிப்பாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வெறும் சிக்கன் துண்டுகளுக்காக ஒரு பெண்ணைத் தாக்கி உணவகத்தைச் சேதப்படுத்திய இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.