ஈரானுடனான போர் பதற்றம் காரணமாக மேற்காசிய நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தற்காலிகமாக அனுமதி வழங்கியிருந்தது. குறிப்பாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் அதற்கு வரி விதிக்கப்படாது என்றும் அமெரிக்கா சலுகை அளித்திருந்தது.
இந்தியாவுக்கு வழங்கப்பட்ட இந்தத் தற்காலிக அனுமதி கடந்த 11-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ரஷியா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான காலக்கெடுவை இனி நீட்டிக்கப் போவதில்லை என்று அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசன்ட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால், ரஷியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
