உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி இந்து பல்கலைக்கழக (BHU) மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளி ஒருவருக்குத் தவறான துறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா என்ற பெயரில் இரண்டு நோயாளிகள் வெவ்வேறு வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நரம்பியல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டிக்கு, எலும்பு சிகிச்சைக்கான அறுவை சிகிச்சை கூடத்தில் வைத்துத் தவறான ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
தவறான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூதாட்டியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழுவில், தவறு செய்த அதே மருத்துவர் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
