ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார்.
தன்னை துரோகி என்று கூறும் பழனிசாமிதான் உண்மையான துரோகத்தின் மொத்த உருவம் என்று அவர் விமர்சித்தார். சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் என தனக்கு உதவிய அனைவருக்கும் பழனிசாமி துரோகம் செய்ததாகவும், தன்னை முதல்வராக்கியவர்களையே கட்சியை விட்டு நீக்கியவர் அவர் என்றும் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக விஜய் வருவதை மக்கள் முடிவு செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். விஜய்யின் கூட்டங்களுக்கு வரும் மக்கள், ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தானாகவே அன்பினால் கூடுகிறார்கள் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்திற்கு விஜய் போன்ற ஒரு புதிய தலைவர் வர வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கனவு, வரும் தேர்தலில் உறுதியாக நிறைவேறும் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
