திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அண்ணன் மு.க.அழகிரி இடையே நிலவி வந்த பனிப்போர், சமீபத்தில் தயாநிதி அழகிரியின் உடல்நலக்குறைவின் போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டதன் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது அழகிரியின் மகள் கயல்விழி ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி, ஸ்டாலின் குடும்பத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பேட்டியில், தென் மாவட்டங்களில் மு.க.அழகிரியின் பலம் இன்னமும் குறையவில்லை என்றும், அவர் களத்தில் இல்லாதது எதிர்வரும் தேர்தல்களில் திமுகவுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றும் கயல்விழி குறிப்பிட்டுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் போன்ற மாற்றுக் கட்சித் தலைவர்களைக் கூட திமுகவில் சேர்ப்பது குறித்துப் பேசப்படும் நிலையில், ரத்த சொந்தமான தனது தந்தையை மீண்டும் கட்சியில் சேர்க்க ஏன் தயக்கம் காட்டப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் மாவட்ட அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரியின் பங்களிப்பு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கயல்விழி, குடும்ப ஒற்றுமை என்பது அரசியல் ரீதியாகவும் வெளிப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், கயல்விழியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
