பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், மெட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் மெட்டா நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி குறித்து இந்தச் செய்தி விவரிக்கிறது. உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான மார்க் மீது பல்வேறு விமர்சனங்களும், வழக்குகளும் உள்ளன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக மெட்டா நிறுவனத்திற்குப் பலமுறை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் கூட மெக்சிகோ நீதிமன்றம் சுமார் 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை சவால்களுக்கு மத்தியிலும்,மெட்டா நிறுவனம் தற்போது ஏஐ துறையில் மிகத் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது.
மெட்டா நிறுவனத்தில் சுமார் 79,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்கள் அனைவருடனும் நேரடியாகப் பேச மார்க்கிற்கு போதிய நேரமில்லை. இதற்குத் தீர்வாக, மார்க் ஜூக்கர்பெர்க்கின் ‘ஏஐ நகலை’ மெட்டா உருவாக்கி வருகிறது. மார்க்கின் பேசும் விதம், சிந்தனைகள் மற்றும் அவர் எடுக்கும் முடிவுகளைக் கொண்டு இந்த ஏஐ-க்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் பாஸுடன் உரையாட முடியும். மேலும், நிறுவனத்தின் உள்விவகாரத் தகவல்களை மார்க்கிற்கு உடனுக்குடன் வழங்க ஒரு ‘CEO ஏஜென்ட்’ ஏஐ-யும் அவருக்குத் துணையாகச் செயல்பட்டு வருகிறது.
