ஜியோ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா இணைந்து, சாதாரண பட்டன் போன் பயன்படுத்துபவர்களுக்காக ‘பாப் வேர்ல்ட் லைட்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன. கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் உள்ள மக்கள் எளிதாக வங்கிச் சேவைகளைப் பெற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தச் செயலி மூலம் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் யுபிஐ வசதியைப் பயன்படுத்தி கடைகளில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம், மற்றவர்களுக்குப் பணம் அனுப்பலாம் மற்றும் செல்போன் ரீசார்ஜ் போன்ற சேவைகளை மிக எளிதாகச் செய்யலாம். முதற்கட்டமாக இந்தச் செயலி ‘ஜியோபோன் ப்ரிமா 4ஜி’ போன்களில் கிடைக்கிறது.
இது மிகக் குறைந்த இணைய வேகத்திலும் சீராகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, மற்ற வங்கி வாடிக்கையாளர்களும் இதில் சுயமாகப் பதிவு செய்து பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
பாதுகாப்பான மற்றும் எளிமையான வடிவமைப்பைக் கொண்ட இந்தச் செயலி, டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
