கன்னியாகுமரி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த கனிமொழி எம்.பி, பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வெளிமாநிலங்களில் தமிழர்களை இழிவுபடுத்திப் பேசிவிட்டு, தமிழகத்தில் மட்டும் தமிழ் பிடிக்கும் என்று நாடகம் ஆடுவதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தியபோதும், தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தின் அரசியல் வலிமையைக் குறைக்கச் சதி நடக்கும்போதும் எடப்பாடி பழனிசாமி அதைத் தட்டிக்கேட்காமல் மௌனம் காப்பதாக அவர் சாடினார்.எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காகச் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரைப் புறக்கணித்தவர் என்றும், டெல்லி சொல்படி நடக்கும் அடிமை ஆட்சியை நடத்தியவர் என்றும் கனிமொழி விமர்சித்தார்.
2016-ல் அறிவித்த செல்போன் திட்டத்தையே நிறைவேற்றாத அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதாகக் கூறுவது வேடிக்கையானது என்றார். எனவே, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழர்களை இழிவுபடுத்துபவர்களுக்குப் பாடம் புகட்டவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
